Chidambaram Government Kamaraj General Hospital

சிதம்பரம் அரசு காமராசர் பொது மருத்துவமனையை இராசா முத்தையா மருத்துவக் கல்லூரியுடன் இணைப்பதைக் கைவிடுக!

சிதம்பரம் இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தனியாரிடம் இருந்து அரசே ஏற்றுக்கொண்டது.

இருந்த போதிலும் , மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குனரகமே நடத்துகிறது.

அரசே ஏற்று நடத்தும் இராசா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் இல்லை. முன்பு தனியார் மருத்துவக் கல்லூரியாக இருந்த போது எப்படி மிக மிக அதிக கட்டணம் வசூலிக்கப் பட்டதோ அதைப்போலவே மாணவர்களிடம் ஆண்டுக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படும் அவலம் நிலவுகிறது.

மேற்படி மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமானது அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் தமிழக அரசு இதுவரை ரூபாய் 1200 கோடிக்கும் மேலாக செலவிட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடானது மிகவும் மோசமடைந்து வருகிறது.

தனியாரிடம் இருந்து அரசு நிர்வாகத்திற்கு வந்த பின்பும், மேற்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

ஒருபுறம் நிர்வாகக் குளறுபடிகள். மறுபுறம் கட்டண சிகிச்சை மற்றும் கவனிப்பின்மை. இதனால், பொது மக்களுக்கு ஏழை எளிய நோயாளிகளுக்கு தகுதியான மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறவில்லை. அதனால், நாளடைவில் நோயாளிகள் வருகை குறைந்து கொண்டே செல்லும் நிலை. உள்நோயாளர்கள் , வெளிநோயாளர்கள் எண்ணிக்கை , அவர்கள் பெறும் சிகிச்சையின் அளவு பெருமளவு குறைந்து விட்டது.

ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனைத்து துறைகளும் இருந்தும் இப்படிப்பட்ட தாழ்வான நிலைக்கு செல்ல என்ன காரணம்?

அதேவேளையில், சிதம்பரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் பெருகி வருகிறது. மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை குறைந்த அளவு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களோடு இயங்கி வந்த போதிலும் நாளொன்றுக்கு 1650 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

அதேவேளை, சிதம்பரம் அரசு மருத்துவமனையை விட ஐந்து மடங்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ள, தனித்தனி துறைகள் உள்ள ராசா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனைத்து துறைகளையும் சேர்த்து 400 வெளிநோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கின்றது. 400 வெளிநோயாளிகள் என்பது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கவனிக்கும் வெளிநோயாளிகள் எண்ணிக்கை ஆகும்.

சிதம்பரம் அரசு காமராசர் பொது மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 365 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

ராசா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 125 தான் நடக்கிறது.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 4 மகப்பேறு மருத்துவர்கள், 2 மயக்க மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் ரா.மு.ம.க.ம.மனையில் தனிதுறை, பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் என ஏராளமான பேர் உள்ளனர்.

இது போலவே ஏனைய துறைகளின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளது.

இதனால், மருத்துவக் கல்லூரி யின் அங்கீகாரம் காலாவதியாகும் சூழல் ஏற்கட்டுள்ளது.

ஏற்கனவே, பல பட்ட மேற்படிப்பு இடங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் உருவாகி வருவது தடைபடுகிறது. இது தமிழக அரசின் மருத்துவத் துறைக்கும் பொது மக்களுக்கும் பெரிய இழப்பாகும்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்திறன் குறைந்து வரும் நிலையில், அதன் செயல்பாட்டை செயற்கையாக உயர்த்திக் காட்ட சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையை மேற்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

குறைந்த அளவு மருத்துவர்களை வைத்து , கடும் உழைப்பை பிழிந்து எடுக்கும் அரசு அதன் பலனை சோம்பேறி ராசா.மு.ம.க. மருத்துவமனைக்கு தருவது மிகப் பெரிய அநீதியாகும்.

உழைப்பது ஒருவர்.

உழைக்காமலே இருப்பவர்கள் அப்படியே இருக்க முயற்சிகள் எடுப்பது அவலமான ஒரு சூழலாகும் .

இதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசுக் கட்டுப் பாட்டில் இருந்தும் தனியார் நிறுவனம் போல செயல்படும் நிறுவனத்தோடு மாநில அரசின் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் சிறப்பான அரசு பொது மருத்துவமனையை குறுகிய பலன்களுக்காக எப்படி இணைக்க முடியும்?

வட்டந்தோறும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் படி செயல்பட்டு வரும் தமிழக அரசு, பெரிய பாரம்பரியமான, பழைய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத குறையைப் போக்க சிதம்பரம் ராசா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போலவே, சேர்க்கை, கல்விக் கட்டணம், நிர்வாகம், பொது இட மாறுதல், மருத்துவ சேவைகள் அதில் இடம்பெற வேண்டும். அப்போது தான் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான தரத்துடன் செயல் பட முடியும்.

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை வழக்கம் போலவே செயல்பட வேண்டும். அங்கு மேலும் கூடுதல் மருத்துவர்கள் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.