இந்திய உச்ச நீதி மன்றம் மருத்துவப் படிப்பிற்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வை அவசர அவசரமாக இந்த ஆண்டே நடத்தச் சொல்லி ஆணையிட வேண்டிய அவசியம் என்ன?
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் போது நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின்(CBSE) அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மிக மிகக்கேடான வழிமுறையாகும்.
பலவகையான பாடத்திட்டங்கள் இருக்கின்ற நிலையில் நகர்ப்புற மேற்குடியினருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் CBSE முறையில் நடத்துவது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான, ஏழை மக்களுக்கு எதிரான வஞ்சகமான திட்டமிட்ட சதியோ என நினைக்கத் தோன்றுகிறது.
இன்று IIT,IIM களில் நமது மக்களின் பங்கேற்பு என்ன நிலையில் உள்ளதோ அதே நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படும்.
அது மட்டுமின்றி எல்லாவற்றையும் தில்லியில் இருந்து திணிக்கும் போக்கும்,மக்கள் மன்றங்களுக்கு சமூக நீதி விடயத்தில் உள்ள கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் ஆதிக்க சக்திகள் நீதி மன்றங்களின் வழியே பறித்துக் கொள்ளும் போக்கும் கண்டிப்பாக எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும்.
ஒரு சந்தேகம்…? தன்னாட்சி பெற்ற எய்ம்ஸ்,ஜிப்மர், பிஜிஐ சண்டிகர், படைத்துறை மருத்துவக் கல்லூரி களுக்கு மட்டும் என்ன காரணத்தினால் தனி நுழைவுத் தேர்வு வைத்துள்ளனர்?
உச்சநீதிமன்றம் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை உள்ளது?
ஒரே ஒரு நுழைவுத் தேர்வு என்றால் மேலே சொல்லப்பட்ட நான்கு கல்லூரிகளுக்கு நான்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமே!
அந்தக் கல்லூரியில் மட்டும் என்ன புதிதாக கற்றுக் கொடுக்கப் போகின்றனர்?
மக்களே! மாணவர்களே!! மருத்துவர்களே!!!
விழிப்போடு இருக்க வேண்டிய நேரமிது!”