Mass General Body Meeting at Chennai on Mar 26, 2017


சென்னையில் இன்று நடைப்பெற்ற சங்கப் பொதுக்குழு சந்திப்பில்  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. ஊதியப்பட்டை 4 (PB 4):
    அரசாணை 354 ன் படி,மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவதாக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை. தமிழக அரசு மருத்துவர்கள் ஊதியத்தில் மத்திய அரசு மருத்துவர்களை விட பத்தாண்டுகள் பின் தங்கியுள்ளோம். இந்த ஊதிய முரண்பாட்டை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பாக களைந்து 4,9,13 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும்.
    எனவே, தமிழக அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல 13ஆம் ஆண்டில் ஊதியப்பட்டை 4ஐ (PB 4) வழங்க வேண்டும்.
  2. நீட் தேர்வு
    நாடு முழுவதும் வேறுபட்ட பாடத்திட்டங்கள் நிலவுகிறது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுவது தவறாகும். மேலும் நீட் தேர்வு, கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களை பாதிக்கும் சமூக நீதிக்கெதிரான தேர்வாகும். நுழைவுத் தேர்வே வேண்டாம் என்பது தமிழக அரசின், மக்களின் நிலைப்பாடு. இந்த நீட் தேர்வின் விளைவாக தமிழக மக்களின் எதிர்கால சுகாதார சேவையே பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும். எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என மாண்புமிகு மத்திய சுகாதார அமைச்சர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் அறிவித்துள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
  3. பழைய ஓய்வூதியத் திட்டம்
    பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு ஆய்வுக்குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
  4. குடும்ப நல நிதி
    பணிக்காலத்தில் பல அரசு மருத்துவர்கள் திடீரென இறந்து விடுவதால் அவர்களுடைய குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய் குடும்ப நல நிதி வழங்க வேண்டும். அதற்கான நிதித் தொகுப்பை அரசு மருத்துவர்கள் பற்கேற்புடன் உடனே தொடங்க வேண்டும்.
  5. குழந்தை நல பராமரிப்பு விடுப்பு
    மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 720 நாட்கள் குழந்தை நல பராமரிப்பு விடுப்பு (Child Care Leave) வழங்க வேண்டும்.
  6. மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 
    மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் சிகிச்சை அளிக்கும் இடத்தில் தாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதனை நிரந்தரமாக தடுக்க,மருத்துவர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

Youtube Link:
https://youtu.be/8KVAMMokM_4
https://youtu.be/3tUS17LiXt8